Tuesday, 1 November 2011

போதி தர்மா வாழ்க்கை வரலாறு / Bodhi Dharma Life History


‘போதி தர்மரை, தமிழர் என்றும், சீனாவுக்குப் போய் தற்காப்புக் கலையை கற்றுத் தந்தவர் என்றும்' சொல்கிறது ஏழாம் அறிவு ‘போதி தர்மரை, தமக்குறிய 28 சமயக் குரவர்களில் ஒருவராக போற்றுகிறது பவுத்தம். இவர் போதித்த பவுத்தக் கொள்கைகளைத்தான் ‘ஜென் தத்துவம்' என ஜப்பானியர்கள் கூறுவதாக சொல்கிறார் தமிழ் வரலாற்றுப் பேரறிஞர் மயிலை சீனி. வேங்கடசாமி. உலகம் முழுக்க உள்ள வரலாற்று நூல்களும் இவ்வாறுதான் சொல்கின்றன.

ஐரோப்பிய, வரலாற்று ஆய்வறிஞரான இ.டி.சி.வார்னர், ‘காஞ்சிபுரத்தில் வாழ்ந்த புகழ்பெற்ற பவுத்த ஞானியான பிரஜ்னதாராவின் சீடன்தான் போதிதாரா. குருவைக் காட்டிலும் மிதமிஞ்சிய ஞானம் பெற்றிருந்த போதிதாராவை, ‘போதிதர்மா' என்று பெயர் மாற்றியதே அவர்தான்' என்கிறார். வார்னரின் கூற்றுப்படி, போதிதர்மர், காஞ்சியிலேயே ஞானம் பெற்றிருந்திருக்கிறார்.

போதி தர்மரின் வரலாறு தெளிவாக இல்லாத நிலையில் ,இருக்கின்ற தகவல்கள் மற்றும் சான்றுகளை கொண்டு ,இங்கே ஒரு சிறு விவாதம் ..


போதி தர்மரின் காலமெனப் பதிவுகள் கூறுவது, கி.பி.475 முதல் 550 வரையாகும். இந்தக் காலகட்டத்தில்,  கி.பி. 300 முதல் கி.பி. 600ம் ஆண்டுகள் வரை, தமிழகத்தை ‘களப்பிரர்கள்' அரசாண்டதாக ஆய்வு நூல்கள் சொல்கின்றன. அந்த அடிப்படையில் பார்க்கும்போது, போதி தர்மரும் களைப்பிரர் பரம்பரையைச் சேர்ந்தவர்தான்.' என்கிறது.

களப்பிரர் வரலாறு குறித்து, விரிவான சான்றுகள் எதுவும் கிடைக்கவில்லை .

ஆனால், களப்பிரர் காலத்தில்தான் ‘சமணமும் பௌத்தமும்' தமிழகத்தில் தழைத்தோங்கி இருந்தது. சமணர்கள், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தமிழுக்கு தொண்டாற்றியிருக்கிறார்கள். ‘சீவக சிந்தாமணி, வளையாபதி, நீலகேசி, திருக்குறள், நாலடியார், பழமொழி நானூறு, ஏலாதி, திணைமாலை நூற்றைம்பது' என, தமிழ் செம்மைக்கு அவர்கள் ஆற்றிய தொண்டுக்கு நிகரே இல்லை.

இங்கே, ‘களப்பிரர்கள் என்போர், ஒரே இனத்தவராக இல்லாமல், நாகர்கள், எயினர்கள் உள்ளிட்ட பல்வேறு இனக்குழுக்களை அதாவது பதினெட்டு கணங்களை உள்ளடக்கியவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.' என்கிறார் நாகர் சேனையின் தலைவரான கரிகாலன். கணம் என்பது, ஒரு கூட்டம், தொகுதி, தொகுப்பு என்று பொருள் தரும். பதி என்பது தலைவன் என்று பொருள்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், களப்பிரர்களின் மூலம் எது? வலிமை பெற்றதற்கான பின்னணிகள் என்ன? தமிழகத்தினுள் படையெடுத்த காலம் எது? ஆரம்பத்தில் எந்தெந்த மன்னர்களை அவர்கள் தோற்கடித்தார்கள் என்பன போன்ற எந்த விபரங்களும் கிடைக்கவில்லை. அதே சமயம், ‘‘எண்ணிறைந்த பேரரசர்கள் அப்போது ஆண்டு மறைந்தனர்' என்று வேள்விக்குடிச் செப்பேடும், சின்னமனூர்ச் செப்பேடும் கூறுகின்றன.

ஆக, கிடைத்துள்ள சில கல்வெட்டுச் சான்றுகள், இலக்கியங்களில் ஆங்காங்கே காணப்படும் சில தகவல்களின் அடிப்படையில், வரலாற்றாய்வாளர்கள் சில ஊகங்களை வெளியிட்டுள்ளார்கள். அவர்கள் வெளியிட்டவர்களுள் ஒருவன், ‘அச்சுத விக்கிரந்த களப்பாளன்' களப்பிர மன்னர்களுள் ஒருவனான இவன், தமிழகத்தை ஆண்டு வந்த மூவேந்தர்களையும் சிறைபடுத்தி, ஆட்சியைக் கைப்பற்றியதாக கூறுகிறார்கள்.

‘யாப்பருங்கல விருத்தி' நூலில் இவனது படைகளின், போர் ஆற்றல் பற்றிய குறிப்புக்கள் காணப்படுகின்றன. கி.பி.நான்காம் நூற்றாண்டில் உறையூரில் வாழ்ந்து வந்த ‘புத்ததத்தர்' என்ற பௌத்த ஞானி, பாலி மொழியில் தான் எழுதிய ‘அபிதம்மாவதாரம்' எனும் நூலில், “களப்பாளன், தமிழகத்தினை ஆண்டதனால், உலகினை ஆட்சி செய்தான்' என்று புகழ்ந்து கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழநாட்டுப் பேரறிஞரான மயிலை சீனி.வேங்கடசாமி, தன்னுடைய ‘‘களப்பிரர் ஆட்சியில் தமிழகம்' எனும் நூலில், ‘களப்பிரர் தமிழரும் அல்லர், ஆரியரும் அல்லர்' எனச் சொல்வதுடன், ‘அன்னோர், பிராகிருதம், பாலி ஆகியவற்றை தமக்குறிய மொழிகளாகக் கொண்டு வடபுலத்தினின்று வந்தவர்' என்கிற சதாசிவ பண்டாரத்தாரின் கூற்றையும் மேற்கோள் காட்டுகிறார். முடிவில், ‘களப்பிரர்களுடைய மொழி பிராகிருதம் அன்று, கன்னட மொழியே' என்பதுடன், ‘களப்பிரர், தமிழகத்துக்கு அண்மையில் இருந்த கன்னட வடுகர்' என்கிறார்.

களப்பிரர் காலகட்டத்தை அறியக்கூடிய மிகச்சிறந்த ஆவணங்கள், அக்காலகட்ட இலக்கிய நூல்களே. பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள நீதி நூல்கள், அப்போது உருவானவையே. களப்பிரர்கள் தமிழ் மொழியை ஆதரித்தவர்கள் என்றாலும், பாலி மொழியைத்தான் பிரதானமாகப் பயன்படுத்தியுள்ளனர். ஆனால், ‘‘பின்னர் வந்த இந்து சமயத்தவர்கள், களப்பிரர்களின் ஆட்சிக் காலத்தையும், அரசர்கள் பற்றிய குறிப்புகளையும், அவர்களது தமிழ்ப் படைப்புகளையும் இருட்டடிப்பு செய்துவிட்டனர்’’ என்றால், நிச்சயம் அது மிகையாகாது.

பல்லவர்கள்:

கி.பி.300 முதல் கி.பி.600 வரை, களப்பிரர் காலம் என்று சொல்லும் அதே வேளையில், கி.பி நான்காம் நூற்றாண்டு தொடக்கம் முதல் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கம்வரை, ஏறத்தாழ 700 ஆண்டுகள் தமிழகத்தை பல்லவர்கள் ஆட்சி புரிந்ததாகவும் ஆய்வு நூல்கள் தெரிவிக்கின்றன. இதை வைத்துப் பார்த்தால், களப்பிரர்களும் பல்லவர்களும், சமகாலங்களில் தனித்தனியாக ஆட்சி புரிந்திருக்கக்கூடும் எனத் தெரிகிறது.

இதில், குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், ‘பல்லவர் பட்டயங்கள் அனைத்தும், பிராகிருத மொழியிலும், வேறுபல வடமொழியிலும்தான் இருக்கின்றன. பல்லவர் காலத்து தொண்டை மண்டலப் பேரரசிலும், வடமொழிதான் ஆட்சி செலுத்தியிருக்கிறது.

அக்காலத்தில், ‘பாரவி, தண்டி' முதலிய வடமொழிப் புலவர்கள்தான் செல்வாக்குப் பெற்றிருந்தனர். மாறாக, கி.பி. எட்டாம் நூற்றாண்டுவரை எந்தத் தமிழ்ப் புலவரும் பல்லவர் ஆதரவு பெற்றதாகத் தெரியவில்லை (சரி பார்க்கவும்). மேலும், பல்லவர், தம்மைப் ‘பாரத்வாச கோத்திரத்தார்' என்று பட்டயங்களிலும் கல்வெட்டுகளிலும் கூறிக்கொள்கின்றனர். ஆனாலும், பிற்காலத்து அரசியல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, பல்லவர்களும் தமிழ் மொழியின் பயன்பாட்டை ஏற்றுக்கொண்டதாகத் தெரிகிறது.

சரி, பல்லவர்கள் தமிழர்களா?

‘பண்டைய தமிழ்நாட்டிற்கும், இன்றைய தமிழ்நாட்டிற்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. இன்றைக்கு நம்மிடையே தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் எல்லோரையும், தமிழர்கள் என்கிறோம். அன்றைக்கு பல்வேறு மொழிகள் புழக்கத்தில் இருந்ததாக தெரிய வருகிறது. ஆயினும், அன்றைக்கு யாரெல்லாம் தமிழைப் பேசினார்களோ, தமிழை செம்மையுறச் செய்தார்களோ, அவர்களை எல்லாம் தமிழர் என்று சொல்வதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. அந்தவகையில், பல்லவர்களும் தமிழர்களே' என்கிறார் தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ம.ராசேந்திரன்.

பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ஜெகதீசனிடம் கேட்டபோது, ‘‘‘நெல்லையில் பேசக்கூடிய தமிழுக்கும், சென்னையில் பேசக்கூடிய தமிழுக்கும், வார்த்தைகளில், உச்சரிப்புகளில் நிறைய வித்தியாசம் இருப்பதைக் காண்கிறோம். அப்படி, ஒரு எல்லைக்கும் இன்னொரு எல்லைக்கும் நடுவில் இருந்த மக்களின் வட்டார வழக்குகள், ஒரு காலத்தில் தனி மொழியாக உருவமெடுத்தன. அப்படி உருவானவைதான் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவை' என்கிறார் பேராசிரியர் அன்பழகன். (நம்ம தி.மு.க அன்பழகன்தாங்க).

இன்றைக்கு, இருமாநில எல்லையோர மக்கள், இரு மொழிகளையும் பேசக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். அந்த வகையில், பல்வேறு அரசுகளால் ஆளப்பட்டு வந்த பண்டைய தமிழகத்தில், ‘இரு மொழி, மும்மொழி’ எனப் பேசிய மக்களுக்கு, ‘இன்னதுதான் தாய்மொழி' என்று யார் ஒருவரும் எழுதி வைக்கவில்லை. எனவே, ஒருவரின் தாய்மொழியை கண்டறிவதில் சிரமம் இருக்கிறது' என்றவர்,

‘என்னுடைய மாணவரான டாக்டர்.மாணிக்கவாசகம், வர்மக்கலை குறித்த தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வில், ‘போதிதர்மர்’ குறித்து ஒரு கட்டுரை சமர்ப்பித்திருக்கிறார். அதில், குறிப்பிடப்பட்டுள்ள ஆதாரங்களின்படி, ‘காஞ்சிபுரத்தை ஆண்ட பல்லவ மன்னன் கந்தவர்மனுக்கு பிறந்த மூன்றாவது மகன்தான் போதி தர்மர்' என்ற (“bodhi dharma was the 3rd child of king’s skanda in south tamilnadu” written by ‘Hideo Nakamura’ -1955) கூறியிருப்பதும், ‘கி.பி.520 ம் ஆண்டுகளில்தான் போதி தர்மர் சீனாவுக்கு போயியிருக்கிறார்' என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்டு முனைவர் பட்டமும் வழங்கியிருக்கிறார்கள்.

போதி தர்மரின் கால கட்டங்களை(கி.பி.520) வைத்து, அவரை, களப்பிரர் என்று எடுத்துக்கொண்டால்கூட, களப்பிரர்களை ‘கன்னடர்' என்கிறார் மயிலை சீனி.வேங்கடசாமி.
கன்னடத்தின் மூலமொழியே தமிழ்தான். மிகப்பெரிய மேதையான போதி தர்மருக்கு, அப்போதிருந்த அணைத்து மொழிகளும் தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு. எனவே, பல்லவ மன்னனுக்கு பிறந்தவர் என்ற அடிப்படையிலும், திராவிடர் என்ற அடிப்படையிலும் வைத்துப் பார்க்கும்போது, போதி தர்மரும் தமிழர்தான் என்பதில் ஐயமில்லை' என்கிறார்.

‘களப்பிரரோ, பல்லவரோ! காஞ்சிபுரத்தை ஆண்ட அரசனின் மகனாகப் பிறந்த போதி தர்மர், பவுத்த நெறியை ஏற்றுக்கொண்டுதான் துறவியாக மாறினார். பின்னர் சீனாவுக்கு சென்று, அங்கே ஜென் தத்துவத்தையும் தற்காப்புக் கலையையையும் பயிற்றுவித்தார். 

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.